புதுடெல்லி: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் மின்சாரம் மற்றும் தண்ணீர் இலவசம் என்ற திட்டம் விரிவுபடுத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கேற்றார் போல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என பாஜக நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் திட்டம் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நான் எங்கு சென்றாலும், நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளால் பயனடைவதாகக் கூறும் வாடகைதாரர்களை மின்சாரம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்," என்றார்.
வாடகைக்கு குடியிருப்பவர்களின் பிரச்னைகளை போக்கும் வகையில் தீர்வு காணப்படுவதற்கான அறிவிப்பை கெஜ்ரிவால் வெளியிட்டார். "தேர்தலுக்குப் பிறகு, பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த வாடகைக்கு குடியிருப்போர்கள் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீரின் நன்மைகளை அனுபவிப்பார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்றார்.
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சி தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நோக்கில், ஆம் ஆத்மி கட்சி தனது பிரச்சாரத்தை கட்டமைத்து வருகிறது.