டெல்லி:வரும் மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். சுற்றுப்பயணத்தின் இடையே பிரதமர் மோடி கோவை மாநகரில் வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுவை பரிசீலனை செய்த பின்னர், வாகன பேரணிக்கு (Road Show) அனுமதி இல்லை என மறுத்து பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை முக்கியமாக 5 காரணங்களை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி, வடகோவை, கங்கா மருத்துவமனை உட்பட பல்வேறு முக்கிய இடங்கள் உள்ளன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும், காய்கறி சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்களும், இந்த சாலையை கடக்க முடியாதவாறு இடையூறு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கலை சந்திக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் விரைவில் துவங்க உள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் சந்தர்ப்பத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களது தேர்வுக்கு இடையூறாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் அவர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருக்கும் நிலையில், 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடி குண்டு செயலிழப்பு கருவிகளைக் கொண்டு சோதனை நடத்துவது என்பதும், சாலையின் இரு புறங்களில் மக்கள் நிற்கும் இடத்தில் ஒவ்வொரு தனி நபரிடமும் சோதனை மேற்கொள்வது என்பதும் சிரமமான விஷயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.