லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரபல ரவுடியாக இருந்து, அரசியல்வாதியாக மாறி, பின்னர் சிறை சென்ற முக்தார் அன்சாரி, நேற்று (மார்ச் 28) இரவு 10.30 மணியளவில் மாரடைப்பால் பாண்டா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 63. ஆனால், அவரது மகன் உமர் அன்சாரி, தனது தந்தையான முக்தார் அன்சாரிக்கு சிறையில் விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், முக்தார் அன்சாரியின் சகோதரரும், காசிப்பூர் எம்பியுமான அஃப்சல் அன்சாரியும், சிறையில் அன்சாரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அஃப்சல் மேலும் கூறுகையில், “விஷம் கலந்த உணவு சிறையில் தனக்கு கொடுக்கப்பட்டதாக முக்தார் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு கொடுக்கப்படுவது இரண்டாவது முறை ஆகும். கிட்டத்தட்ட 40 நாட்கள் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
யார் இந்த முக்தார் அன்சாரி? கடந்த 1963ஆம் ஆண்டு செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த முக்தார் அன்சாரி, தனது 15வது வயதில், அதாவது 1978ஆம் ஆண்டு காசிப்பூரில் உள்ள சைத்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது முதல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, அடுத்த பத்து வருடத்தில் தாதா உலகில் நன்கு தெரிந்த முகமாக மாறிய அன்சாரி மீது, 1986ஆம் ஆண்டு காசிப்பூரின் முகம்மது காவல் நிலையத்தில் வேறு ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்த 10 வருடங்களில் 14 குற்ற வழக்குகள் முக்தார் அன்சாரி மீது பதிவு செய்யப்பட்டன.
முக்தார் அன்சாரியின் அரசியல் பயணம்: 1996ஆம் ஆண்டு பகுஜான் சமாஜ் கட்சியின் மெள சட்டமன்ற உறுப்பினராக முக்தார் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, 2002 மற்றும் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, குவாமி ஏக்தா தள் என்ற கட்சியைத் தொடங்கிய முக்தார் அன்சாரி, மீண்டும் மெள தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 2017ஆம் ஆண்டிலும் மெள தொகுதியில் அன்சாரி எம்எல்ஏ ஆனார்.
முக்தார் அன்சாரி மீதான வழக்குகளும் தண்டனைகளும்: 2005ஆம் ஆண்டு முதல் அவரது இறப்பு வரை அன்சாரி உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் நீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீது கொலை மற்றும் உத்தரப்பிரதேச கேங்ஸ்டர் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் 28 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 8 குற்ற வழக்குகளுக்கு உள்ளாக்கப்பட்டு, வெவ்வேறு நீதிமன்றங்களில் விசாரணையைச் சந்தித்துள்ளார்.