புதுடெல்லி: ஏற்கனவே உள்ள பான் 1.0 திட்டத்தை மறு சீரமைக்க ரூ.1435 கோடியில் மத்திய அரசு திட்டம் ஒன்று வகுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு கடந்த 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி பான் 2.0 திட்டமானது வரி செலுத்துவோர் பதிவு சேவைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றம் செயல்படுத்தப்படுகிறது.
பான் 2.0 என்பது என்ன?: தற்போதைய பான் அட்டையில் இருந்து பான் 2.0 என்பது வித்தியாசமான ஒன்றா இல்லையா என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். நாம் அறிந்தவரை பான் அல்லது நிரந்தர கணக்கு என்பது 10 இலக்கங்களைக் கொண்டதாகும். இது வருமான வரித்துறையால் வழங்கப்பட்டதாகும். வரி செலுத்துதல், வரி பிடித்தம், வரி வசூல் வரவுகள், வருவாய் கணக்கு தாக்கல், குறிப்பிட்ட பரிமாற்றங்கள், தொடர்புகள் மற்றும் இது போன்ற ஒரு நபரின் அனைத்து பரிவர்த்தனைகளோடும் இந்த எண்ணை வருமான வரித்துறை இணைத்துள்ளது.
ஏற்கனவே உள்ள பான் அட்டையை தரம் உயர்த்தி, வரி செலுத்துவோருக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் மேலும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதே அரசின் நோக்கமாகும். ஏற்கனவே உள்ள உங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணை ஒருங்கிண்ந்த வகையில் பான் 2.0 ஆக தரம் உயர்த்தப்படும்.
புதிய பான் 2.0 முறை நடைமுறைக்கு வரும்போது அனைத்து அரசு முறைகளிலும், சீரான தன்மை மற்றும் இணக்கத்தை எளிதாக்குதல் என்ற வகையில் பான் என்பது பொதுவான அடையாளமாக டிஜிட்டல் தொடர்புகளைக் கொண்டிருக்கும். சேவைகளை எளிதாக்குவதற்கு அனைத்து அரசாங்க அமைப்புகளும் அடையாளம் கண்டு அதன்படி பயன்படுத்தும் ஒரு ஒத்திசைக்கப்பட்ட தரவுத்தளமாக இருக்கும். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு முடிவின்படி முக்கியமான, முக்கியத்துவம் அல்லாத பான்/ டான் சேவைகளை ஒரேமாதிரியாக இணைப்பது , காகிதமில்லா தளமாக மாற்றுதல் அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இணைத்தல் என்பதை நோக்கமாக கொண்டு்ளது
உங்களிடம் உள்ள இப்போதைய பான் அட்டை செல்லுமா அல்லது க்யூ ஆர் குறியீட்டுடன் ஒரு புதிய பான் அட்டை வாங்க வேண்டுமா?:எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி புதிய க்யூ ஆர் குறியீட்டுடன் ஏற்கனவே உள்ள பான் அட்டையை தரம் உயர்த்திக் கொள்ளலாம். எனினும் இது கட்டாயம் அல்ல. ஏற்கனவே உள்ள பான் அட்டைகள் தொடர்ந்து செல்லுபடியாகும். இது குறித்து கடந்த திங்கள் கிழமையன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:மாணவிகளிடம் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆசிரியர் சான்றிதழ்கள் ரத்து! பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு..!