சென்னை : ஆவடி அடுத்த கெளரிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (34). இவருக்கு சரவணன் என்பவருடன் திருமணமாகி உள்ளது. இருவரும் இதே பகுதியில் வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். அமுதாவின் கணவர் சரவணன் நாளடைவில் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.
இந்நிலையில், ஆவடி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (37) என்பவருடன் அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி உள்ளது. சில காலங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், அமுதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த திவான் முகமது (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் இருவரின் பழக்கம் காதலாக மாறி, இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த சுந்தரம் அமுதாவிடம் சென்று என் கூட வாழ வேண்டுமென அடிக்கடி தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அமுதா திவானிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. திவான், தனது நண்பரான கோபிநாத் என்பவரின் உதவியுடன் சுந்தரத்தை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.
கடந்த செப் 2ம் தேதி 2017ம் ஆண்டு சுந்தரத்தை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, மறைந்திருந்த திவான் மற்றும் அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் சேர்ந்து சுந்தரத்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வீட்டிலேயே பள்ளம் தோண்டி அவரது உடலை புதைத்து சிமெண்ட் போட்டு மூடி வர்ணம் பூசி மறைத்துள்ளனர்.
இதையும் படிங்க : ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் தலைமுடி சிக்கி கல்லூரி மாணவி மரணம்! இது எப்படி நிகழ்ந்தது?
இந்நிலையில், சுந்தரத்தை காணவில்லை என அவரது தாயார் யசோதா ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அமுதா, திவான், ராஜேஸ்வரி, கோபிநாத் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுந்தரத்தை கொலை செய்து வீட்டிலேயே பள்ளம் தோண்டி புதைத்தது தெரிய வந்தது.
பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை பூந்தமல்லி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் விசாரித்து வந்தார். மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 7 வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி திவானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், வழங்கி நீதிபதி நேற்று ( நவ 28) தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த வழக்கில் கோபிநாத், ராஜேஸ்வரி, அமுதா ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அரசு தரப்பு வக்கீல் புரட்சிதாசன் கூறுகையில், "சினிமா பட பாணியில் சுந்தரம் என்ற நபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி திவானுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு அரசு சார்பில் மிக்க நன்றி" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்