தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும் கடந்த செப் 5ம் தேதி படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த பொழுது, ரோந்து கப்பல் அங்கு வந்து தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி மீனவர்களை கைது செய்து படகு மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 12 மீனவர்களை கொண்டு சென்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மீனவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, மீனவர்களையும் அவர்கள் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் வீடு திரும்பினர்..!
இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் சமீபத்தில், தமிழக மீனவர்கள் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும் ஆகிய 12 மீனவர்களையும் விடுதலை செய்தது.
இதன் பின்னர் மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 12 மீனவர்களுக்கும், மருத்துவ பரிசோதனைகள் செய்து எமர்ஜென்சி சர்டிவிகேட் இந்தியா அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அதன்படி, 12 மீனவர்கள் இன்று (நவ 29) இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் மூலம் அனுப்பி வைத்தனர். சென்னை வந்த 12 மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று வாகனம் மூலம் சொந்த ஊரான தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்