மதுரை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தலைமையிலான அதிகாரிகள் இன்று சிவகங்கை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைக்கு தேவையான விளக்குகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " சிவகங்கை ரயில் நிலையத்தில் நாங்கள் வழக்கமான ஆய்வை தான் மேற்கொண்டோம். சிவகங்கை எம்எல்ஏ, நகர மன்ற தலைவர் கோரிக்கைகள் குறித்து கேட்டுள்ளேன் சிவகங்கை ரயில் நிலையத்தில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி தரப்படும்" என்று சிங் கூறினார்.
புதிய பாம்பன் பாலம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அங்கு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் எந்தவித குழப்பமும் இல்லை. பாம்பன் பாலம் விரைவில் திறக்கப்படும்." என்று ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
ஆணையரின் அறிக்கையும், சர்ச்சையும்: முன்னதாக, பாம்பன் புதிய ரயில் பாலத்தின் உறுதித்தன்மை, கடல் அரிப்பு, கர்டர்களின் தாங்கு திறன், தூண்களின் வலுத்தன்மை ஆகியவை குறித்து கடந்த நவம்பர் 13-14-ஆம் தேதிகளில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ரயில்வே வாரிய செயலாளருக்கு சௌத்ரி தமது கள ஆய்வறிக்கையை அனுப்பினார். அந்த அறிக்கையில், "உலகின் மோசமான 2-ஆவது கடல் அரிப்புச் சூழலைக் கொண்ட பாம்பன் கடலில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் அதற்குரிய போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ரயில்வேயின் தவறு எனவும் தற்போதைய பாலத்தின் பல்வேறு பகுதிகளில் துருப்பிடிக்கத் தொடங்கியுள்ளன" என குறிப்பிடப்பட்டிருந்தது. பாம்பன் புதிய பாலம் குறித்த ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இந்த அறிக்கையை சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஐந்து பேர் கொண்ட ஆய்வு குழு: இதனையடுத்து, பாம்பன் புதிய பாலம் குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று இந்திய ரயில்வே வாரியம் அண்மையில் அறிவித்திருந்தது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, '' பாம்பன் பாலத்தில் மேற்கொண்ட பணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிக்கைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டியவை குறித்து ரயில்வே வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது ரயில்வே வாரியத்தால் அமைக்கப்பட உள்ள குழு உரிய நேரத்தில் அதற்கான பணிகளைத் தொடங்கும். இன்று அல்லது நாளை அக்குழு உறுப்பினர்கள் குறித்து அறிவிக்கப்படலாம்' எனத் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், 'ரயில்வே வாரிய உயர் அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தக் குழுவில் இடம் பெறக்கூடும். மதுரை ரயில்வே கோட்டம் அதற்குத் தேவையான உதவிகளை வழங்கும்' என்றனர்.