டெல்லி : முதல் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் சுமூகமாக நிறைவு பெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
இதில் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 77.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி திரிபுராவில் 76.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் 63.92 சதவீதம் வாக்குகளும், அசாம் 70.77 சதவீதம், சத்தீஸ்கர் 63.41 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 65.08 சதவீதம், மத்திய பிரதேசம் 63.25 சதவீதம், மணிப்பூர் 68.58 சதவீதம், மேகாலயா 69.91 சதவீதம், மிசோரம் 52.91 சதவீதம், நாகாலாந்து 55.97 சதவீதம், புதுச்சேரி 72.84 சதவீதம், சிக்கிம் 68.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
39 தொகுதிகளை தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 62.28 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரகாண்டில் 5 மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 53.56 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 57.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.