கொல்கத்தா:மேற்கு வங்கத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனைத்திலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். எனவே அவர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மேற்கு வங்கத்தில் உள்ள நைஹாட்டி, ஹரோவா, மேதினிபூர், தல்தாங்ரா, சீதை (SC), மற்றும் மதரிஹாட் (ST) ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் ஐந்து தொகுதிகள் ஏற்கனவே திரிணாமூல் காங்கிரஸ் வசம் இருந்தது. மதரிஹாத் தொகுதி மட்டும் பாஜக வசம் இருந்தது.
கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 69.29 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கியதில் இருந்தே அனைத்து ஆறு தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக நண்பகல் நிலவரப்படி சிதாய் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சங்கீதா ராய், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தீபக் குமார் ராயை விட 1,02,051 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். மதரிஹாட் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபிரகாஷ் டோப்போ, தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராகுல் ரோகாரை விட 25165 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.