கொல்கத்தா: நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, ஆள் மாறாட்டம், நீட் தேர்வு மையங்களே நீட் முறைகேடுகளை முன்னெடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கிளம்பின. இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நீட் முறைகேடுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின.
இதற்கிடையே, தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தொடர் முழக்கங்கள் எழுந்துள்ளன.
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டபேரவையில் நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேநேரம் நீட் தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன் மேற்கு வங்க மாநில அரசு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.