டெல்லி:18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றன. இதில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கு மேற்பட்ட இடங்களிலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 230க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதால் வெற்றி சாத்தியமானது.
பாஜக மட்டுமின்றி அமலாக்கத்துறை, சிபிஐ எதிர்த்து நின்று இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். இந்திய அரசியலமைப்பு சாசனத்தை பாதுகாக்கவே இந்த தேர்தலில் போட்டியிட்டோம். அதற்காக எங்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள் பலவற்றை இரண்டாக உடைத்தது பாஜக. இதை அனைத்தையும் தாண்டி அரசியலமைப்பை பாதுகாக்கவே இந்த தேர்தலை எதிர்கொண்டோம். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன்.5) நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அது குறித்து அறிவிப்போம்.
அரசியலமைப்பை பாதுகாக்கும் போரில் உத்தர பிரதேச மக்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தை உத்தர பிரதேச மக்கள் காப்பாற்றி உள்ளனர், அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். ரேபரேலி மற்றும் வயநாடு என இரண்டு தொகுதியில் வெற்றி பெற்று உள்ளேன். இரண்டு தொகுதி மக்களுக்கும் மனமார்ந்த நன்றி.