புதுடெல்லி:இஸ்ஸாமியர்களின் வழிபாட்டு தலங்களின் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இதற்காக வக்ஃப் சட்டம் 1995 நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தில் மத்திய பாஜக அரசு தற்போது பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மாநில வக்ஃப் வாரியங்களுக்கான அதிகாரங்கள், வக்ஃப் வாரிய சொத்துகளின் பதிவு மற்றும் மதிப்பீடு உள்ளிட்டவை தொடர்பான விவகாரங்களை களையும் நோக்கில் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், வக்ஃப் திருத்த சட்ட மசோதா 2024 நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.. மசோதாவை தாக்கல் செய்து அமைச்சர் கிரண் ரஜுஜு பேசும்போது, " வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட மசோதா யாருடைய உரிமையை பறிக்கவோ எந்தவொரு ஒரு மத அமைப்பின் சுதந்திரத்தில் தடையிடவோ இல்லை. மாறாக, இந்த உரிமைகளை பெறாதவர்களுக்கு அதனை வழங்கும் நோக்கிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது" என்று அமைச்சர் ரஜுஜு கூறினார்.
மேலும் பேசிய அவர், " சச்சார் கமிட்டி அமைத்ததை மறந்துவிட்டு இன்று சிலர் இந்த மசோதாவை எதிர்க்கிறார்கள். இன்று இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் முன்பு இதற்கு ஆதரவாக இருந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மசோதாவை எதிர்ப்பவர்கள், அதற்கு முன் பல்லாயிரக்கணக்கான ஏழை குழந்தைகள், பெண்கள் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்" என்றும் அமைச்சர் பேசினார்.