மும்பை:20 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பிசிசிஐ தரப்பில் மும்பை வான்கடே மைதானத்தில் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
விமான நிலைய ஓடுபாதையை அடைந்த விமானத்திற்கு பாரம்பரிய முறைப்படி தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து வாகனத்தில் வீரர்கள் வான்கடே மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வழிநெடுக இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வான்கடே மைதானத்திற்கு செல்லும் இந்திய வீரர்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் உலக கோப்பை காட்சிப்படுத்துகின்றனர். தொடர்ந்து நடைபெறும் நிகழ்வில் 20 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழு உள்ளிட்டோருக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை பிசிசிஐ சார்பில் வழங்கப்படுகிறது.
முன்னதாக பார்படாசில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இந்திய வீரர்கள் இன்று காலை 6 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வீரர்கள் அழைத்து வரப்பட்டனர். டெல்லி விமானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட கேக்கை ரசிகர்களுடன் வீரர்கள் வெட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்த இந்திய வீரர்கள் காலை 11 மணி பிரதமர் மோடியை சந்தித்தனர். 7 லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு விரைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய வீரர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இந்திய வீரர்கள் பிரத்யேக ஜெர்சி அணிந்திருந்தனர். வழக்கமாக அணிந்து கொள்ளும் ஜெர்சிக்கு பதிலாக சாம்பியன் என்று எழுதப்பட்டு இருந்த ஜெர்சியை அணிந்து கொண்டு வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். மேலும் பிரதமர் மோடிக்கும் நமோ என்ற எழுத்துக்கள் பொறிப்பட்டு இருந்த சிறப்பு ஜெர்சி பிசிசிஐ சார்பில் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு! - PM Modi Meet Indan team