டெல்லி: 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் மோசடி தொடர்பாக, ஜாபர் சாதிக் என்பவரை நேற்று (மார்ச் 09) போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (NCB) கைது செய்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி, ஜாபர் சாதிக் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அவரது அனைத்து சமூக வலைத்தளப் பதிவுகளும், மு.க.ஸ்டாலினின் மகனான விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் அமைச்சர்கள் சிலர், ஜாபர் சாதிக்குடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, ஸ்டாலினுக்கும், போதைப்பொருள் கடத்தல் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கும் இடையிலான அவரது உறவை விளக்க வேண்டும்.