டெல்லி:நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து கடந்த ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.
அதைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடியை தவிர, பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களை தவிர, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, பியூஷ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இதே போல் மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதமாராக பதவியேற்றபின் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 20,000 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான காப்பில் கையெழுத்திட்டார்.