பெங்களூரு:மத்திய கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அமைச்சரும், ஜேடிஎஸ் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி இன்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடைபயணம் மேற்கொள்வதற்காக திட்டமிட்டன.
இதனையடுத்து, வெளியில் எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது மூக்கில் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது. உடனடியாக, அவர் தனது கைக்குட்டையால் மூக்கை மூடிக் கொண்டு அங்கிருந்து விலகிச் சென்றார்.
இருப்பினும், எடியூரப்பாவை செய்தியாளர்களை அணுகுமாறு அவர் தெரிவித்து விட்டுச் சென்றார். இதனையடுத்து, அவரை அவரது மகனும், நடிகரும், அரசியல்வாதியுமான நிகில் குமாரசாமி மற்றும் இதர ஜேடிஎஸ் மூத்த தலைவர்கள் சேர்ந்து ஜெயாநகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுதொடர்பாக ஜேடிஎஸ் நிர்வாகிகள் கூறுகையில், “குமாரசாமியின் உடல்நலத்தில் எந்த பிரச்னையும் இல்லை. அதிகப்படியான சூடு காரணமாக மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மிக விரைவில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்று விடுவார்” எனத் தெரிவித்தனர்ர்.
முன்னதாக, இன்று காலை முதல் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் எச்.டி.குமாரசாமி பங்கேற்றதாக தெரிகிறது. இதன்படி, இன்று நஞ்சகுட் டவுனில் உள்ள கோயிலுக்குச் சென்ற அவர், பின்னர் மைசூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதன்பிறகு, பெங்களூரு சென்று பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார். மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆர். அசோகா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து குமாராசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “யாரும் கவலை கொள்ள வேண்டாம். உங்களது நல்ல வாழ்த்துகளால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. என்னுடைய பெற்றோர் ஆசிர்வாதம் மற்றும் கடவுள் அருள் இருக்கிறது.
நான் மன உளைச்சல் அல்லது ஓய்வின்றி இருக்கும்போது இவ்வாறு மூக்கில் இருந்து ரத்தம் வருவது எனக்கு இயல்பு. எனது வேலை அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லிக்கு என் மீது நம்பிக்கை வைத்து மக்கள் என்னை அனுப்பியுள்ளனர். நான் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பூட்டப்பட்ட அரசு விருந்தினர் மாளிகை.. காத்திருந்து நடையை கட்டிய மத்திய அமைச்சர்.. கர்நாடகாவில் பரபரப்பு!