டெல்லி:உலகப் புகழ் பெற்ற திருப்பதி திருமலை கோயில் ஆந்திராவில் உள்ளது. இக்கோயில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.
புவிசார் குறியீடு பெற்றுள்ள திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கோயிலின் புனிதம் அசுத்தப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு மறுநாள், லட்டு மாதிரியின் ஆய்வக சோதனை முடிவு அறிக்கை என்ற ஒன்றின்படி, மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை திருப்பதி லட்டுவில் உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதன் பிறகு இந்த விவகாரம் பூதாகரமானது. மத்திய, மாநில அமைச்சர்கள், இந்து அமைப்புகள், மதகுருக்கள் ஆகியோர் இந்த விஷயம் குறித்து தங்கலாது கருத்துகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். மேலும், திருப்பதி லட்டுவுக்கு நெய் சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தரப்பில், தங்களது தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்தத் தயார் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஏழுமலையான் கோயிலில் சாந்தி ஹோமம்! தேவஸ்தானம் கொடுத்த முக்கிய அறிவிப்பு
அதனைத் தொடர்ந்து, மாநில மற்றும் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அது மட்டுமல்லாமல், நெய் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எடுத்துச் சென்றார். இதனிடையே, ஆந்திரா மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், திருப்பதி கோயிலில் தோஷம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனை போக்குவதற்கு 11 நாட்கள் சிறப்பு பரிகாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். அதேநேரம், கோயில் முழுவதும் கோமியம் தெளிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என நேற்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் தரம் விதி 2026-ஐ கடைபிடிக்க தவறிவிட்டதாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே, இந்த நோட்டீஸுக்கு செப்டம்பர் 23-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த விதியின் படி, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் அதன் வழிமுறைகளைக் கடைபிடிப்பது கட்டாயம் ஆகும். அதேநேரம், இதன் FSSAI உரிமம் 2029ஆம் ஆண்டு ஜூன் 1 வரை உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.