செங்கல்பட்டு/திருப்பூர் : செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், ஊரப்பாக்கம் அருகே உள்ள கிராமங்களில் உள்ள ஏரிகளில் முதலைகள் அதிகளவில் இருந்து வருகின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பும் போது முதலைகள் ஏரிகளில் இருந்து சாலைகளுக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், அருங்கல் உள்ளிட்ட பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். ஏற்கனவே இதே போன்று சென்ற ஆண்டு மழைக்காலங்களில் சாலைகளில் முதலை நடமாட்டம் இருந்த நிலையில் அந்த முதலைகளை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக பிடித்து சென்றனர்.
இந்த நிலையில், இன்று வண்டலூர் அடுத்த அருங்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் 5 அடி முதலை தென்பட்டதால், அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த வனத்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, வலையை வீசி முதலையை பிடித்து அதனை கயிறால் கட்டி அங்கிருந்து கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் குறித்து அண்ணா பல்கலைகழகம் புதிய விளக்கம்!
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த முதலை கீரப்பாக்கம் பகுதி அருகே உள்ள கல் குவாரியில் இருந்து விவசாய நிலத்திற்கு வந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று அடிக்கடி பெருங்களத்தூர், வண்டலூர் சுற்றுவட்டார பகுதிகளில் முதலைகள் தென்படுவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், அருங்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை முழுமையாக சோதனை செய்து முதலைகள் கணக்கெடுப்பு நடத்தி அனைத்தையும் வனத்துறை அதிகாரிகள் பிடித்து செல்ல வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரை பகுதிக்கு தினமும் பொதுமக்கள் துணி துவைக்கவும், விவசாயிகள் கால்நடைகளை மேய்ப்பதற்கு அதிக அளவு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் உள்ள குடிநீர் தரை நிலை தொட்டியில் கடந்த சில தினங்களாகவே முதலை ஒன்று அவ்வபோது படுத்து உறங்கி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. எனவே தற்போது மழைகால என்பதால் மழை பெய்து ஏரி, குளம் நிறைய வாய்ப்பு அதிக இருப்பதால் வனத்துறையினர் இந்த முதலை நடமாட்டம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்