டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேசிய தேர்வு முகமை தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரிக்கப்படும். நீட் தேர்வு குளறுபடி விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை பாதுகாக்கப்பட வில்லை, தவறு செய்து அது உறுதியாகும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பீகாரில் நீட் தேர்வு வினாத் தாள் கசிந்தது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சைபர் கிரைம் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேசிய தேர்வு முகமையின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த வித முறைகேடுகளையும் அரசு ஆதரிக்காது, நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க உயர் மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.