பாட்னா:மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலம் பெகுசாராயில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மீண்டும் முத்தலாக் மற்றும் இஸ்லாமியர் தனிநபர் சட்டம் கொண்டு வர இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருவதாகவும், ஆனால் அவர்கள் ஆட்சி அமைக்க மாட்டார்கள் நாட்டில் மீண்டும் முத்தலாக் மற்றும் இஸ்லாமியர் தனிநபர் சட்டத்தை அவர்களால் கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்களவை தேர்தலில் வென்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்றும் மோடி பிரதமராகி நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவார் என்று அமித்ஷா கூறினார். பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மவோயிஸ்ட் ஊடுருவல்களை பிரதமர் மோடி முடுவுக்கு கொண்டு வந்து உள்ளதாகவும் பீகாரில் நிலவிய வேலைநிறுத்த கலாசாரம் மற்றும் கொலை கொள்ளை கொடூரங்களுக்கு முடிவு கட்டியதாகவும் கூறினார்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவை கடுமையாக விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தீவன ஊழலில் சிக்கியவர்கள் பதவியை விட்டு கீழ் இறக்கப்பட்ட பின், பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமாரின் அரசுகள் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்த எல்லையையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிவித்தார்.