பெங்களூரு:கர்நாடக மாநிலம் ஹசன் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரஜ்வெல் ரேவண்ணா தொடர்புடையதாக கூறப்படும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதில் ஆயிரக்கணக்கான பெண்களை பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.
தன்னிடம் உதவி கேட்ட வந்த பெண்களிடம் பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தற்போது அந்த வீடியோ வெளியானதாகவும் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி கர்நாடகா மாநில மகளிர் ஆணைய தலைவர், மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.
அதேநேரம், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போட்டோ மற்றும் வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளதாக பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இதனிடையே பிரஜ்வெல் ரேவண்ணா இந்தியாவை விட்டு வெளியேறியதாக தகவல் பரவியது. இந்நிலையில், ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் ஹோலேநரசிபூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எச்.டி.ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஆஜராவதில் 7 நாட்கள் அவகாசம் கோரியுள்ளார் பிரஜ்வெல் ரேவண்ணா. பெங்களூரு இல்லாத காரணத்தால் விசாரணைக்கு ஆஜாரக ஒரு வாரம் கால அவகாசம் வழங்குமாறு பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் வழக்கறிஞர் சிறப்பு புலானாய்வு குழுவுக்கு கோரி உள்ளார்.
இதுகுறித்து பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார். இதனிடையே ஆபாச வீடியோ விவகாரத்தில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறும், இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவான பிரஜ்வல் ரேவண்ணாவை விரைவாக கைது செய்யுமாறும் கர்நாடக டிஜிபி அலோக் மோகனிடம், மாநில மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆபாச வீடியோ விவகாரம்: எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்! - Karnataka Prajwal Revanna Case