டார்ஜிலிங் (மேற்கு வங்கம்):மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்துக்குட்பட்ட நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (KANCHANJUNGHA EXPRESS TRAIN) மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று காலை 8.45 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், சரக்கு ரயில் மற்றும் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டதில் பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். 60 பயணிகள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் கொல்கத்தா வடக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ரயில்வே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்தது எப்படி?:அஸ்ஸாம் மாநிலம், சிலிகாரில் இருந்து மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் சில்தாக் ரயில் நிலையம் நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் பயணித்துக் கொண்டிருந்தது. இன்று காலை 8.45 மணியளவில், டார்ஜிலிங் மாவட்டம், நியூ ஜல்பைகுரி பகுதிக்குட்பட்ட ரங்கபானி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டும், அவற்றில் சில பெட்டிகள் அந்தரத்தில் தொங்கியப்படியும் இருந்தன.
பயணிகள் விரைவு ரயில் தடத்தில், சிக்னலை கவனிக்காமல் சரக்கு ரயில் கடந்து சென்றதே விபத்துக்கான காரணம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.