அமராவதி:திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெறும்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
திருப்பதியில் நேற்று முன்தினம் இரவு இலவச தரிசன டோக்கன் வழங்கும் மையங்களின் மூன்று இடங்களில் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர்கள் டோக்கனை வாங்க முண்டியடித்துக் கொண்டதில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சீனிவாசம் கவுன்டரில் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
தலா ரூ.25 லட்சம் நிவாரணம்:திருப்பதியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயம் அடைந்தோரை சந்தித்து ஆந்திர வருவாய் துறை அமைச்சர் அங்கனி சத்ய பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அங்கனி சத்ய பிரசாத், " நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கும்," என்று அறிவித்தார். மேலும் அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராம நாராயண ரெட்டி மற்றும் மூத்த அதிகாரிகள் ரூயா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் காயமடைந்தோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
முன்னதாக தலைநகர் அமராவதியில் முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு தலைமையில் டிஜிபி, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருப்பதி நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். துணை காவல்துறை கண்காணிப்பாளர்களின் அதீத ஆர்வம் காரணமாக திருப்பதியில் நெரிசல் நேரிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு கண்டிப்பு:இதனைத்தொடர்ந்து அமராவதியில் இருந்து இன்று மாலை திருப்பதி சென்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நெரிசல் நேரிட்ட பகுதிகளை பார்வையிட்டார். நெரிசல் எப்படி நேரிட்டது என்பது குறித்து கேட்டறிந்த அவர், அதற்கு காரணமான திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை கண்டித்தார். பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், ஏன் தகுந்த முறையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவில்லை என்றும் அதிகாரிகளிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் திருப்பதி தேவஸ்தானத்தின் இணை செயல் அலுவலர் கவுதமியிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய முதலமைச்சர், நெரிசல் சம்பவத்துக்குப் பின்னர் என்ன நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். உரிய நேரத்தில் அலுவலர்களுக்கு உத்தரவிட தவறியதாக அவரை முதல்வர் கண்டித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நேராமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
திருப்பதி நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உட்பட ஐந்து பேரும்,ஒரு ஆணும் உயிரிழந்துள்ளார். நெரிசலில் காயமுற்ற 48 பேர் திருப்பதியில் உள்ள ரூயா மற்றும் ஸ்விம்ஸ். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.