பஹ்ரைச்: உத்தரபிரதேசப் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தின் குக்கிராம மக்கள் கடந்த பல நாட்களாக தூக்கம் இன்றி தவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு மஹாசி மற்றும் திவான்பூர் ஆகிய இரு கிராமங்களில் இரு குழந்தைகளை ஓநாய்கள் கவ்விக்கொண்டு சென்றுள்ளன.
பின்னர் இரு குழந்தைகளையும் ஓநாய்கள் கடித்து தின்று கொன்றுள்ளன. அதில், ஒரு குழந்தை தாயின் மடியில் உறங்கிக்கொண்டிருந்தபோதே சுற்றி வளைத்த ஓநாய்கள் குழந்தையை கவ்விக்கொண்டு வயல்வெளி பகுதியில் பதுங்கியுள்ளன. ஓநாய்களை பிடிக்க தாய் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது. பின்னர் அந்த குழந்தை வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
இதுபோல, கடந்த இரண்டு மாதங்களில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என 9 பேர் ஓநாய்களுக்கு இரையாகி உள்ளனர். ஓநாய்கள் தாக்குதலால் அச்சத்தில் உள்ள கிராமங்களில் மின்சார வசதி இல்லாததால், குழந்தைகளோடு வசிக்கும் குடும்பங்கள் மட்டுமல்ல பெரியவர்களே உறக்கமின்றி பீதியில் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.
பொதுவாக, இங்குள்ள கிராம மக்கள் கழிவறை வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்க செல்கின்றனர். இந்த சூழலில், ஓநாய்களின் அச்சுறுத்தல் அவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலையும் கொடுத்துள்ளது.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், "இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் ஓநாய்களின் தாக்குதல்கள் தொடங்கின. ஜூலை 17க்குப் பிறகு அவை தீவிரமடைந்தன. தொடர் தாக்குதலுக்கு பிறகு அரசுக்கு கோரிக்கை வைத்தோம்... இதனால், அரசு 'ஆபரேஷன் பேடியா' என்ற பெயரில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓநாய்களைக் கண்காணித்து பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றனர்.
வனத் துறையைச் சேர்ந்த ரேணு சிங் என்பவர் கூறுகையில், " 'ஆபரேஷன் பேடியா' மூலம் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி வயல்வெளியில் பதுங்கியுள்ள ஆறு ஓநாய்களை கண்டுபிடித்தோம். அதில், நான்கு ஓநாய்களை பொறி வைத்து பிடித்துவிட்டோம். இன்னும் இரண்டு ஓநாய்கள் பதுங்கி இருக்கின்றன.
ஓநாய்களை விரட்ட தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் பாரம்பரிய முறைகளும் பின்பற்றப்படுகின்றன. ஓநாய்கள் பயப்பட யானை சாணத்தையும் கிராமத்தை சுற்றி பயன்படுத்தப்படுகிறது" என அவர் கூறினார்.
ரத்தவெறி பிடித்த ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள வனத்துறையினர் உதவி மட்டும் போதாது என அந்த கிராம மக்கள் அனைவருமே ஓநாய்களிடம் இருந்து வயதானோர், குழந்தைகள், பெண்களை காக்க ஒன்றிணைந்துள்ளனர்.
இதையும் படிங்க:தெலங்கானா வெள்ளத்தில் இளம் பெண் விஞ்ஞானி உயிரிழப்பு!