பாரமுல்லா:ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்கியதில் 2 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளார். நான்கு ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் நான்கு நாட்களுக்கு முன்பு மருத்துவர் ஒருவர்,கட்டுமான தொழிலாளர்கள் 6 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரித்தாம் சிங் என்ற தொழிலாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை யார் தாக்கினர் என்ற விவரம் தெரியவரவில்லை.
இந்த நிலையில் போதாபத்ரி பகுதியில் இருந்து 18ஆவது ராஷ்டிரிய ரைபிள் படையை சேர்ந்த வாகனம் ஒன்று வீர ர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீர ர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதையும் படிங்க:காஷ்மீரில் புதிய தீவிரவாத அமைப்பு உருவாக்கம்...போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர். இந்த பகுதி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் ராணுவத்தினர் எந்தநேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருப்பர். அதனையும் மீறி இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவை சேர்ந்த லெப்டினன்ட் எம்வி சுசிந்திரா குமார் தாக்குதல் நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"போதாபத்ரி பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் உயிரிழந்திருப்பதும், சிலர் காயமடைந்தனர் என்பது மிகவும் துரதிஷ்டவசமான செய்தி.
காஷ்மீரில் அண்மைகாலமாக நடைபெறும் தாக்குதல் மிகவும் தீவிரமான கவலைக்குரிய விஷயமாகும். இந்த தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். காயமடைந்தோர் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கின்றேன்,"என்று தெரிவித்துள்ளார். பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முக்தியும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்