ஆனந்த்நாக்(ஜம்மு-காஷ்மீர்): ராணுவ வீரர் ஒருவரை ஆனந்த்நாக் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் கடத்தி சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனந்த்நாக்கின் வனப்பகுதியில் இருந்து இரண்டு ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்து விட்டார். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ஒரு ராணுவ வீரரை மீட்பதற்காக பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராணுவ அதிகாரிகள் வட்டாரம், "ஆனந்த்நாக்கின் வனப்பகுதியில் இருந்து இரண்டு வீரர்கள் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி வந்து விட்டார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரை கண்டுபிடிக்கும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்," என்று தெரிவித்துள்ளது.
கடத்தப்பட ராணுவ வீரரின் பெயர் ஹிலால் அகமது பட் என்றும் 162ஆவது யூனிட்டை சேர்ந்தவர் என்றும் ஆனந்த்நாக் மாவட்டத்தின் முக்தம்போரா நவ்கம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பி வந்த ராணுவ வீரரின் பெயர் ஃபையாஸ் அகமது ஷேக் என்றும் தெரியவந்துள்ளது. அவர் தப்பி வரும்போது தீவிரவாதிகளுடன் சண்டையிட்டதால் காயமடைந்ததிருப்பதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அவர் ஶ்ரீநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.