ஹைதராபாத்:நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தான் எந்தக் கட்சியுடனும் அரசியல்ரீதியாக இணைந்திருக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் இத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கியது. இன்று 4ம் கட்டமாக ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு துவங்கிய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்குச் செலுத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர்கள் அல்லு அர்ஜுன் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் காலையிலேயே சக வாக்காளர்களுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.