புதுடெல்லி: இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. ஆனாலும் காற்றாலை ஆற்றல் திறனை அதிகரிப்பதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. இதில் அதன் சொந்த காற்றாலை ஆற்றல் மறுசீரமைப்பு கொள்கையே முக்கிய தடை மற்றும் சவாலாக உள்ளது என்று புதுடெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சிஎஸ்இ) சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
இது தொடர்பாக சிஎஸ்இ-ன் தொழில்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குழுக்களின் திட்ட இயக்குநர் நிவித் கே யாதவ் கூறுகையில், "தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி திறனில் காற்றாலை மின்சாரம் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும். ஆனால், தமிழகமானது காலாவதியான காற்றாலை கருவிகளை கொண்டிருப்பதால் காற்றாலை ஆற்றலின் பங்களிப்பை மாநிலத்தின் மின் உற்பத்தியில் வெறும் 15 சதவீதமாகக் குறைத்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் காற்றாலை ஆற்றல் மறுசீரமைப்பு கொள்கை குறைபாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் மாநிலத்தை அதன் உண்மையான எரிசக்தி ஆற்றலை அடைவதைத் தடுத்துள்ளன. காற்றாலை மின் உற்பத்திக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த சாத்தியம் 25.4 ஜிகாவாட். இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் 7.3 ஜிகாவாட் என சிஎஸ்இ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. காற்றாலை ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்த மீட்டுருவாக்க திறனை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது மாநிலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்வதில் முக்கிய அங்கமாக உள்ளது." என்றார்.
"தமிழ்நாட்டில் காற்றாலை மறுசீரமைப்பை துரிதப்படுத்துதல்" என்ற தலைப்பில் ஆய்வறிக்கையானது சென்னையில் இன்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக சிஎஸ்இ-ன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்ட மேலாளர் பினித் தாஸ் கூறுகையில், "மீட்டுருவாக்கம் என்பது தமிழ்நாட்டின் பழைய காற்றாலைகளை மிகவும் மேம்பட்ட, திறனுடைய மாடல்களாக மாற்றுவதாகும். இது மாநிலத்தின் திறன் பயன்பாட்டு காரணியை (சியுஎஃப்) மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும்.
இதையும் படிங்க:திருப்பதி லட்டு விவகாரம்: "தெலுங்கு தேசம் மத விஷயங்களை அரசியலாக்குகிறது": ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!
மேலும், ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தி, தற்போதைய பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் இடர்களை நிவர்த்தி செய்யும். எங்களது அறிக்கை மாநிலத்தில் காற்றாலை மீட்டுருவாக்கம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துள்ளது. மேலும், மாநிலத்தின் சமீபத்திய மறுசீரமைப்புக் கொள்கையை விமர்சன ரீதியாக ஆராய்கிறது. இது கொள்கை கட்டமைப்பை வலுப்படுத்த முக்கிய தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது. இதனால் தமிழ்நாடு அதன் காற்றாலை ஆற்றல் திறனை அதிகரிக்க வழி வகை கிடைக்கும்.
தமிழக அரசின் காற்றாலை ஆற்றல் மறுசீரமைப்பு கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய குறைபாடுகள்:
உள்கட்டமைப்பு சவால்:தற்போதைய கொள்கையானது, காற்றாலையை நிர்வகிப்பவர்கள் காலாவதியான காற்றாலையை மேம்படுத்துவதற்கு ஊக்கமளிக்கவில்லை. ஏனெனில் அதிகரித்த மின்சார உற்பத்தியை மறுசீரமைப்பிற்குப் பிறகு கையாளுவதில் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு இடைவெளிகள் உள்ளன. 2024 ஜூன் நிலவரப்படி 10.7 ஜிகாவாட் திறன் கொண்ட காற்றாலை ஆற்றல் தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியின் முதுகெலும்பாகும். மறுசீரமைப்பு திட்டங்கள் கூடுதலாக 7.3 ஜிகாவாட் மின் உற்பத்தியை அதிகரிக்கும் திறனை கொண்டுள்ளன. இதன் விளைவாக மின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிக்கும். இது உபரி ஆற்றலை சேகரிக்கும் திறன் மற்றும் அதைக் கையாளும் கட்டமைப்பின் தயார்நிலை குறித்த முக்கியமான கவலைகளை எழுப்புகிறது.
மின் விநியோக உள்கட்டமைப்பு பற்றாக்குறை: மேம்படுத்தப்பட்ட மின் விநியோக உள்கட்டமைப்பின் தேவையை பூர்த்தி செய்வதில் இக்கொள்கை தவறுகிறது. குறிப்பாக மறுசீரமைக்கப்பட்ட காற்றாலைகளுக்கு 11 கிலோ வாட்ஸ் லைன்கள் மேம்பாடு போதுமானதாக இல்லை மற்றும் நிலையற்ற, அடிக்கடி இடையூறு விளைவிப்பதாக உள்ளது.