டெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கேரளாவில் கால் பதித்துள்ள சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு டெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுரேஷ் கோபி, “அமைச்சர் பதவி எனது சினிமா கடமைகளை பாதிக்கும். இது தொடர்பாக தலைமையிடம் தெரிவித்துள்ளேன், விரைவில் அவர்கள் முடிவெடுப்பார்கள்'' என கூறினார். இந்நிலையில், சுரேஷ் கோபி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகவில்லை என இன்று அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், ''பிரதமர் மோடியின் தலைமையிலான அமைச்சர் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்'' என சுரேஷ் கோபி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவிக்கையில், “சுரேஷ் கோபியின் விருப்பம் குறித்து பாஜக தலைமையால் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சுரேஷ் கோபி அவரது திரைப்பட கமிட்மெண்ட்களை முடிக்க காலக்கெடுவையும் மத்திய தலைமை பரிந்துரைக்கும்” என்றும் அவர் கூறினார்.
மேலும், கோபியின் இந்த முடிவுக்கு பின்னால் வெவ்வேறு காரணங்கள் இருப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் கூறினார். அதாவது, கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் ஜார்ஜ் குரியனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருப்பதை சுரேஷ் கோபி விரும்பவில்லை என அவரது வட்டாரத்தில் கூறுகின்றனர்.
மேலும், சுரேஷ் கோபி திருச்சூரில் எல்.டி.எஃப் மற்றும் யூ.டி.எஃப் வேட்பாளர்களை எதிர்த்துப் போராடி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தனக்கும் அமைச்சர் பதவி, ஜார்ஜ் குரியனுக்கும் அமைச்சர் பதவியா என்ற ஈகோ சுரேஷ் கோபிக்கு இருப்பதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் சொல்கிறதாம்.
இந்நிலையில், சுரேஷ் கோபி எடுத்ததாக கூறப்பட்ட முடிவு மோடியின் அமைச்சரவையை மட்டுமின்றி, கேரளாவில் பாஜகவின் வளர்ச்சியை மோசமாக பாதிக்கும் எனவும் பாஜக மூத்த தலைவர் தெரிவித்தார். அதேநேரம், மத்திய அமைச்சரவை பதவிக்காக சுரேஷ் கோபி அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக மற்ற பாஜக தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, டெல்லியில் பதவியேற்பு விழா நடப்பதற்கு முன்பு சுரேஷ் கோபி யாருக்கும் தகவல் சொல்லாமல் திருவனந்தபுரத்துக்கு திரும்பியுள்ளார். அதன் பின்னர், விழாவின் அழைப்பை ஏற்று கடைசி சில மணி நேரத்திற்கு முன்பு மீண்டும் விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். இதனால் விழாவிற்கு முன்பு பிரதமர் மோடி நடத்திய தேநீர் விருந்தில் சுரேஷ் கோபி கலந்துகொள்ளாமல் பதவியேற்பதற்காக நேரடியாக ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க:மோடி கேபினேட் 3.0: தென்னிந்திய அமைச்சர்களின் முழு லிஸ்ட்!