டெல்லி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், கடந்த மே 4ஆம் தேதி கோவை போலீசாரால் தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். பெண் காவலர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர, காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
அது மட்டுமல்லாமல், மே 12 அன்று, அப்போதைய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்ம் பேரில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர் மீது சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் மட்டும் ஏழு வழக்குகள் உள்ளன. அவற்றில் 3 வழக்குகள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, சவுக்கு சங்கரின் தாயார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள ஆட்கொண்டர்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் சுதான்சு துலியா மற்றும் அஷானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.