டெல்லி:உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஆண்டுதோறும் காவடி யாத்திரை எனப்படும் கன்வர் யாத்திரை நடைபெறும். ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெறும். சிவ பக்தர்கள் அனைவரும் காவடி சுமந்து கங்கையில் நதியில் புனித நீராடுவதையே காவடி யாத்திரை என அழைக்கப்படுகிறது.
கங்கை நதியில் இருந்து தங்களது காவடியில் உள்ள பாத்திரங்களில் நீரை நிரப்பும் பக்தர்கள் அதை தங்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள சிவன் கோயில்களில் கும்பாபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். நடப்பாண்டில் கன்வர் யாத்திரை வெகு விமரிசையாக தொடங்கியது.
கங்கையில் புனித நீராடி களங்களில் நீரை நிரப்பி மீண்டும் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். கங்கை நோக்கி செல்லும் பக்கதர்களுக்காக, வழித்தடங்களில் உணவகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயர் பலகைகளிலும், அதன் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் அரசும் கடை உரிமையாளர்கள் தங்களது பெயர்களை கடை பெயர்ப் பலகையில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில், உத்தர பிரதேச மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.