டெல்லி: 2022-இல் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்ற பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் விதமாக இழிவாக கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி யூடியூபரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சாட்டை துரைமுருகனின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து, சாட்டை துரை முருகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் பூயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் எம்.யோகேஷ் கண்ணா சாட்டை துரைமுருகன் சார்பில் ஆஜராகினார். இதையடுத்து, “இவ்வழக்கைப் போல, தேர்தல் சமயத்தில் யூடியூப் உள்ளிட்டவைகள் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எல்லோரையும் சிறையில் அடைக்கத் தொடங்கினால், அப்படி எத்தனை பேர் சிறை செல்ல நேரிடும் என எண்ணிப் பாருங்கள். இவ்விவகாரத்தில் எது தவறான குற்றச்சாட்டு என்பதை எதனடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது” என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வியெழுப்பப்பட்டது.
இவ்வழக்கில் ஏற்கனவே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்ற நிலையில், குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும், எதிர்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு அவர் ஜாமீன் பெற்ற பிறகு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ள இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 'இவ்விவகாரத்தில் அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்வதற்கான காரணம் ஏதும் இல்லை' என்று கூறினர்.