டெல்லி:மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை செய்த மனுவில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீனுக்கு தடை விதித்து தீர்ப்பு வெளியிட்டது.
இந்நிலையில், டெல்லி உயர் நிதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஎம் சிங்வி, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாட்டி தலைமையிலான அமர்வு, பொதுவாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைக்காது என்றும், விசாரணையிலேயே தீர்ப்பு வெளியிடப்படும் என்றனர்.
ஆனால், ஜாமீனுக்கு எதிராக தடை விதிக்கப்பட்ட மனுவின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்து இருப்பது வழக்கத்திற்கு மாறான செயல் என்பதால் பொறுத்திருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர். மேலும் வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ, பணம் மோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும், விரைவில் அந்த மனு குறித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.