புதுதில்லி:பட்டியலினத்தவர் (எஸ்.சி) மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.டி) கல்வி, வேலைவாய்ப்புகளில் பல்வேறு மாநிலங்களில் உள் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
சமூகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் உள் இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஆந்திர மாநில அரசின் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து சின்னையா என்பவர் தொடர்ந்த வழக்கில் 2004 இல் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு மாறாக இந்த தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-க்கு எதிரானது அல்ல என்றும், இப்பிரிவினரின் இடஒதுக்கீட்டு பயன்களை அதிகரிக்க வசதியாக, 'கிரீமிலேயர்' வகையினரை அடையாளம் காண வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இத்தீர்ப்பை வழங்கி உள்ளது. "எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தின் 14 வது பிரிவுக்கு (சம உரிமை) எதிரானது அல்ல; ஏனெனில் உள் ஒதுக்கீடு என்பது 14 ஆவது சட்டப்பிரிவில் இருந்து விலக்கி வைக்கப்படவில்லை. எனவே இடஒதுக்கீட்டின் நோக்கத்தை கருத்தில் கொண்டு, பட்டியலினத்தவரின உள் ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிக்கிறோம்" என்று அரசியல் சாசன அமர்வின் சார்பில் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தெரிவித்தார்.
"இடஒதுக்கீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு திறன்மையின்மை குறித்த களங்கம் இருப்பதால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் முன்னேற முடியாத நிலை உள்ளது" என்றும் நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சமூகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை அளித்துள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவை, விக்ரம் நாத், பெலா எம். திரிவேதி, பங்கஜ் மித்தாய், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர மிஸ்ரா அங்கம் வகித்தனர். 6:1 என்ற விகிதத்தில், அதாவது ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஆறு நீதிபதிகள் உள்ஒதுக்கீடுக்கு ஆதரவளித்தனர். அதனடிப்படையில் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
"எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களில் குறிப்பிட்ட பேர்களே இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறின்றி, இவர்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு மாநில அரசுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்று நீதிபதி காவை தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "கிரீமிலேயர் வகைப்பாட்டுக்குள் வரும் வசதி பொருந்திய எஸ்.சி., சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையையும் கிராமத்தில் கழிவுகளை சுத்தம் செய்பவரின் குழந்தையையும் எப்படி ஒன்றாக கருத முடியும்?" என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்போது ஓபிசி பிரிவில் கிரீமிலேயர் வகைப்பாட்டில் வருபவர்கள், இடஒதுக்கீடு சலுகைகளை பெற முடியாது. அதேபோல, "எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளிலும் கிரீமிலேயர் வகைப்பாட்டுக்கு தகுதியானவர்களை அடையாளங்கண்டு, அவர்களை இடஒதுக்கீட்டு வரம்பில் இருந்து விலக்குவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்" என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: போலி சான்றிதழ் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து - யுபிஎஸ்சி அதிரடி!