மகாராஷ்டிரா:குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இருந்து உத்தர பிரதேசம் மாநில அயோத்திக்கு ஆஸ்தா சிறப்பு ரயில் ஞாயிற்ருக்கிழமை இரவு 8 மணிக்கு கொடியசைத்து துவங்கி வைக்கப்பட்டது. 1,340 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலத்தின் நந்துர்பர் பகுதியில் வந்தபோது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நந்துர்புர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் மகாஜன் கூறுகையில், “நந்துர்புர் அருகே இரவு 10.45 மணி அளவில் ஆஸ்தா சிறப்பு ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட உடன் பயணிகள் உடனடியாக ஜன்னல் கதவுகளை மூடியுள்ளனர்.
இருப்பினுன் ரயில் பெட்டி உள்ளேயும் சில கற்கள் விழுந்துள்ளன. இந்த திடீர் கல்வீச்சு சம்பவம் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கல்வீச்சு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நந்துர்புர் ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், முதற்கட்ட விசாரணை முடிந்த உடன் ரயில் பயணம் தொடர்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சூரத் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வில் ஆஸ்தா சிறப்பு ரயிலை மத்திய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் கொடி அசைத்து துவங்கி வைத்திருந்தார். அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலில் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு பயணம் மகிழ்ச்சிகரமாக அமையட்டும் என அவர் வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.