ஜார்கண்ட்:ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, தனது எக்ஸ் பக்கத்தின் பயோவையும் அவர் மாற்றி உள்ளார்.
முன்னதாக, பயோவில் எம்பிசி நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்றும், ஜேஎம்எம் கட்சியின் துணைத் தலைவர் என்றும் வைத்திருந்தார். ஆனால் தற்போது ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் என்று பயோவில் வைத்துள்ளார். இதன் மூலம் அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, இன்று காலை சம்பாய் சோரன் டெல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. டெல்லி சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சம்பாய் சோரன், "நான் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி வந்துள்ளேன். வதந்திகள் பற்றி எனக்கு தெரியவில்லை" என்று பதலளித்தார்.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நான் ஜார்கண்டின் முதலமைச்சராக இருந்த காலத்தில், எனது கடைமைகளை முழு ஈடுபாடுடனும், அர்ப்பணிப்புடனும் செய்தேன்.
பொது நலனுக்காக பல முடிவுகளை எடுத்தேன். முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும், மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் மனதில் வைத்து நாங்கள் முடிவு எடுத்தோம். எனது பதவிக் காலத்தில் நான் யாருக்கும் எந்த தவறும் செய்யவில்லை.
தவறுகள் நடக்கவும் அனுமதிக்கவில்லை என நாட்டில் உள்ள எல்லாருக்கும் தெரியும். இதற்கிடையில், ஹோலி தினத்தின் அடுத்த நாள், அடுத்த இரு நாட்களுக்கு எனது அனைத்து நிகழ்ச்சிகளும் கட்சித் தலைமையால் ஒத்திவைக்கப்பட்டதை நான் அறிந்தேன்.
இதில் ஒன்று தும்காவில் ஒரு பொது நிகழ்ச்சி, மற்றொன்று நியமன கடிதங்கள் விநியோகம், ஜூலை 3ஆம் தேதி கூட்டணியில் சட்டமன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுவரை முதலமைச்சராக இருக்கும் நீங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது. ஒரு முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை வேறொருவர் ரத்து செய்வதை விட ஜனநாயகத்தில் அவமானம் வேறு இருக்க முடியுமா?
எனது அரசியல் பயணத்தில் முதன்முறையாக நான் உள்ளிருந்து உடைந்து போனேன். என்ன செய்வது என்று புரியவில்லை. இரண்டு நாட்கள், நான் அமைதியாக உட்கார்ந்து முழுச் சம்பவத்திலும் என் தவறை தேடினேன். அதிகார பேராசை ஒரு துளி கூட இல்லை. ஆனால், என் சுயமரியாதையை யாரிடம் காட்டுவது? என் அன்புக்குரியவர்கள் கொடுத்த வலியை நான் எங்கே வெளிப்படுத்துவேன்?
பல ஆண்டுகளாக கட்சியின் மத்திய செயற்குழு கூடாத நிலையில், ஒருதலைப்பட்ச உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் போது, யாரை அணுகி பிரச்னைகளை தெரிவிப்பது? இந்த கட்சியில், நான் மூத்த உறுப்பினராக கருதப்படுகிறேன். ஆனால், என் சுயமரியாதையின் அடியால் நான் மனம் உடைந்தேன். நான் என் முழு வாழ்க்கையையும், அர்ப்பணித்த இந்தக் கட்சியில் எனக்கு இருப்பு இல்லை என்பது போல் உணர்ந்தேன். அதனால் மாற்று வழியை தேட ஆரம்பித்துள்ளேன்.
என் வாழ்வின் புதிய அத்தியாயம் இன்று முதல் தொடங்கப் போகிறது. இதில் எனக்கு மூன்று விருப்பங்கள் இருந்தன. முதலாவதாக, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, இரண்டாவதாக, சொந்தமாக அமைப்பை நிறுவுவது, மூன்றாவதாக, இந்தப் பாதையில் யாரேனும் துணை இருந்தால், அவருடன் மேலும் பயணிக்க வேண்டும். அன்று முதல் இன்று வரை, வரவிருக்கும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வரை, இந்தப் பயணத்தில் எனக்கு எல்லா வாய்ப்புகளும் திறந்தே இருக்கின்றன" என பதிவிட்டுள்ளார்.
ஜார்கண்டில் தற்போது ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்கண்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய இருக்கும் தகவலானது அரசியல் வட்டாரங்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:இந்தியக் கடலோர காவல்படை தலைமை இயக்குனர் மாரடைப்பால் உயிரிழப்பு; ராஜ்நாத் சிங், ஸ்டாலின் இறுதி அஞ்சலி! - Indian Coast Guard DG died