மும்பை: பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய 23 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட ஐந்தாண்டுகள் தடைவிதித்து, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்துக்காக அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடன்கள் ஒப்புதல் வழங்குவதில் விதிமீறல்கள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து செபி தீவிர விசாரணை மேற்கொண்டது.
இதில், அனில் அம்பானி மற்றும் அவரது முக்கிய சகாக்கள் பல்வேறு நிதி முறைகேட்டில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது என்று செபி கூறியுள்ளது. குறிப்பாக, கடன் என்ற பெயரில் அனில் அம்பானியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறைகேடாக நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள செபி, இது தீவிரமான விதிமீறல் என்றும் தெரிவித்துள்ளது.