புதுடெல்லி:குடியுரிமை சட்டத்தின் பிரிவு 6ஏ செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நான்கு நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர்,ஒரு நீதிபதி இதற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.
அசாம் ஒப்பந்தம் கடந்த 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 மேற்கொள்ளப்பட்ட நிலையில் 1955 ஆம் ஆண்டின் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.இந்த சட்டத்தில் பிரிவு 6ஏ சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. குடியுரிமை சட்டம் பிரிவு 6ஏ யின்படி அசாம் மாநிலத்துக்குள் வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1966ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பின்னர், ஆனால், 1971ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதிக்கு முன்னர் வந்தவர்கள் பிரிவு 18ன் கீழ் இந்திய குடியுரிமை பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த சட்டத்திருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கின் மீது மூத்த வழக்கறிஞர்கள் சி.யு.சிங், சஞ்சய் ஹெக்டே, கபில் சிபல், ஷியாம் திவான் உள்ளிட்டோரும், மத்திய அரசின் தரப்பில் ஆர்.வெங்கட்ரமணி, துசார் மேத்தா ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சூர்யா காந்த், எம்.எம்.சுந்தரேஷ், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் குடியுரிமை சட்டம் பிரிவு 6ஏ வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர், நீதிபதி ஜே.பி.பர்திவாலா குடியுரிமை சட்டம் பிரிவு 6ஏ வுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.