டெல்லி: மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிய கடந்த 2016ஆம் ஆண்டு 25 ஆயிரத்து 753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட 25 ஆயிரத்து 753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனம் செல்லாது என்று கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது சிபிஐ விசாரித்து வரும் 8 ஆயிரம் ஆசிரியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு படி 12 சதவீத வட்டியுடன் சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடரும், ஆனால் பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.