புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் வகையில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வயல்வெளிகளிலேயே வைக்கோலை தீ வைத்து எரிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும், மக்கள் கண்ணியமாகவும் மாசு இல்லாத சூழலில் வாழ வேண்டும் என்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக அளவுக்கு நெற் பயிர் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நெற் பயிரை அறுவடை செய்த உடன் நிலத்தில் உள்ள மீதமுள்ள வைக்கோலை தீ வைத்து எரிப்பது அந்த மாநிலங்களின் விவசாயிகளின் வழக்கமாக இருந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர் அறுவடை முடிவடைந்ததும் நிலத்தில் உள்ள வைக்கோல் தீ வைத்து எரிக்கப்படுகிறது.இதனால் எழும் அடர்ந்த புகை தலைநகர் டெல்லியை நோக்கி வருகிறது. இதனால், டெல்லியின் காற்றின் தரம் மாசுபடுகிறது என குற்றச்சாட்டு அடிக்கடி எழுகிறது.
எனவே,இதனைத் தடுக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டின் தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று தர மேலாண்மை சட்டம் என்ற பெயரில் சட்டம் இயற்றப்பட்டது. வைக்கோல் எரிப்பவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
எனினும், விவசாயிகளுக்கு எதிராக இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
போதுமான அமல்படுத்தும் அமைப்புகள் இல்லை:விசாரணையின்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், 2021 ஆம் ஆண்டின் தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று தர மேலாண்மை சட்டமானது போதுமான அமல்படுத்தும் அமைப்புகள் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது மத்திய அரசின் சார்பில் வாதிட்ட ஐஸ்வர்யா பதி,"இந்த சட்டத்தின் பிரிவு 15, வைகோல் எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தீவிரமாக அமல்படுத்தப்படும்.பத்து நாட்களுக்குள் விதிமுறைகள் அமல்படுத்தப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பொறுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.
இதையும் படிங்க:"டெல்லிக்கு மாசு ஏற்படுத்தும் வைக்கோல் எரிப்பை தடுக்காதது ஏன்?" -மாநில அரசுகளை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்
காற்று தர மேலாண்மை ஆணையத்தின் சார்பில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.வைக்கோல் எரிப்பவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது,"என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அதிகாரிகள் மீது கருணை காட்டக்கூடாது. கள அளவில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியவேண்டும் என்றனர்.மீண்டும் குறுக்கிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர் ஐஸ்வர்யா பதி,"பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், பெரோஸ்பூர், பாட்டியாலா, சங்க்ரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த வைக்கோல் எரித்த நபர்களுக்கு எதிராக ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,"என்றார்.
மக்களுக்கான அடிப்படை உரிமை:தீர்ப்பளித்த நீதிபதி அபய் எஸ் ஓகா,"இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருக்கும் சட்டங்களை அமல்படுத்துவது மட்டும் அல்ல. அரசியல் சட்டம் பிரிவு 21ன் கீழ் மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். மக்களுக்கான அரசியல் சட்டரீதியிலான உரிமைகளுடன் தொடர்புடையது என்பதால் சுற்றுச்சூழலோடு தொடர்புடைய சட்டங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.எனவே தொடர்புடைய அதிகாரிகள் வெறுமனே இது ஒரு எதிர்வழக்காக மட்டும் கருதக் கூடாது. மக்கள் கண்ணியமாகவும் மாசு இல்லாத சூழலில் வாழ வேண்டும் என்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்,"என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்