புதுடெல்லி:ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் மற்றும் அவனது குடும்பத்தினரால் இழைக்கப்படும் கொடுமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக வரதட்சணை தடை சட்டம் உள்ளது. எனினும் அண்மை காலங்களில் குறிப்பிடத்தக்க வகையில் திருமண தகராறுகள் நாடு முழுவதும் அதிகரித்திருக்கின்றன. எனவே, இந்த சட்டததை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருக்கிறது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி தனிப்பட்ட பழிவாங்கலை மேற்கொள்ளும் ஒரு கருவியாக உபயோகிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்:எனவே, திருமண தகராறுகள் குறித்த குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்படாவிட்டால், மனைவி அல்லது அவரது உறவினர்களால் சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் அச்சுறுத்தும் தந்திரமாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கில் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, என்.கோட்டீஸ்வர் சிங், "திருமண தகராறுகள் தொடர்பாக எழும் குற்றவழக்கில், அவர்கள் குற்றம் செய்ததற்கான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்படாமல் வெறுமனே குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிடப்படுவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்," என்றனர்.
உச்ச நீதிமன்ற அமர்வின் சார்பில் தீர்ப்பை எழுதிய நீதிபதி நாகரத்தினா, "திருமண முரண்பாட்டின் காரணமாக குடும்ப சண்டைகள் எழும் போது கணவரின் குடும்பத்தினர் அனைவரையும் சிக்க வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது," என்று கூறினார்.
தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்: "வலுவான ஆதாரங்கள் அல்லது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இல்லாமல் முன் வைக்கப்படும் இது போன்ற பொதுவான, கடுமையான குற்றச்சாட்டுகள் குற்ற வழக்கிற்கான அடிப்படை அமைப்பாக இருக்க முடியாது. எனவே இது போன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் கடும் எச்சரிக்கையுடன், அப்பாவி குடும்ப உறுப்பினர்கள் மீது தேவையற்ற துன்புறுத்தல் மறறும் சட்ட வழிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்,"என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
"தற்போதைய வழக்கில் கணவரின் குடும்பத்தை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். தம்பதியுடன் ஒரே வீட்டில் அவர்கள் வசிக்கவில்லை. குற்ற வழக்கில் அவர்களை சேர்க்க முடியாது. ஒவ்வொருவர் மீதும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில் அது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியதாகும்.
கணவர், இரண்டாவது மனுதாரரான அவரது மனைவி இருவரும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையில் வசித்து வந்தனர். கணவர் தெற்கு ரயில்வேயில் பணியாற்றுகிறார். இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டில் திருமணம் செய்தனர். 2016,2017ஆம் ஆண்டுகளில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில் எந்தவித வரதட்சணை கொடுமை அல்லது திருமணம் தொடர்பாக கருத்துவேறுபாடுகள் இருந்தாக நம்ப முடியவில்லை,"என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கணவர், அவரது பெற்றோர், கணவரின் மூன்று சகோதரிகளுக்கு எதிராக வரதட்சணை தடை சட்டம் பிரிவு 3 மற்றும் 4 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 498ஏவின் கீழ் மனைவி புகார் தெரிவித்திருக்கிறார். கணவர் அல்லது அவரது உறவினர்கள் மனைவிக்கு எதிரான கொடுமை புரிந்தனர் என்பதை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 498ஏ குறிக்கிறது. கணவர், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்ய தெலங்கானா உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தனிப்பட்ட பழிவாங்கலுக்கான கருவி: "ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்படும் கொடுமையைத் தடுக்கும் வகையில் அரசின் விரைவான தலையீட்டை உறுதி செய்வதற்காக ஐபிசியின் பிரிவு 498A ஐ ஒரு திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது," என உச்ச நீதிமன்றம் கூறியது.
"எனினும் அண்மை காலங்களில் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க வகையில் திருமணம் தொடர்பான தகராறுகள் அதிகரித்திரு்இன்றன. திருமணம் என்ற கட்டமைப்புக்குள் அதிகரித்து வரும் முரண்பாடு மற்றும் பதற்றம் காரணமாக, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 498ஏ போன்ற வழிமுறைகள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி தனிப்பட்ட பழிவாங்கலை மேற்கொள்ளும் ஒரு கருவியாக உபயோகிக்கப்படுகிறது," என நீதிபதி நாகரத்தினா கூறினார். மேலும் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மற்றும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனைவி தாக்கல் செய்த வழக்கில் எந்த வித குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களையோ அல்லது துன்புறுத்தல் தொடர்பான குறிப்பிட்ட நிகழ்வுகளையோ குறிப்பிடவில்லை. அதே போல அப்படியான துன்புறுத்தல் நிகழ்வுகள் நடந்த நேரம், தேதி, இடம் அல்லது நடந்த விதம் குறித்தவற்றை குறிப்பிடவில்லை.
விவாகரத்து கேட்ட கணவர்: திருமண பந்தத்தில் நம்பிக்கை இழந்ததால் கணவர், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரஸ்பரம் ஒப்புதல் அடிப்படையில் விவகாரத்து கேட்டு மனைவிக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த நோட்டீசுக்கு பதில் அளிப்பதற்கு பதில் 2022ஆம் ஆண்டு மனைவி ரச்சகொண்டாவில் உள்ள நெரெட்மெட் காவல் நிலையத்தில் வரதட்சணை சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4 இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 498ஏயின் கீழ் புகார் தெரிவித்திருக்கிறார்.
"ஆகையால், இரண்டாவது மனுதாரரின் புகாரானது உண்மையானது அல்ல என்ற கருத்தைக் கொண்டுள்ளோம். மாறாக ஒன்றாவது மனுதாரரான கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை பழிதீர்க்கும் வகையிலான நடவடிக்கையாகும்,"என தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
"மேலும், மனைவி ஆனவர், கணவரை மட்டும் கைவிடவில்லை, அதே போல அவர்களது இரண்டு குழந்தைகளையும் கைவிட்டு இருக்கிறார். குழந்தைகள் இப்போது கணவரின் பராமரிப்பில் உள்ளன. மேலும் தனது குழந்தைகளுடன் எந்த உறவையும் மீண்டும் புதுப்பிக்க விருப்பம் காட்டவில்லை என்று மனைவியின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். கணவனின் குடும்பம் எந்தவித காரணமும் இல்லாமல் இந்த வழக்குக்குள் இழுக்கப்பட்டுள்ளனர்," என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஐபிசியின் 498ஏ பிரிவின் கீழ் உண்மையிலேயே கொடுமைகளுக்கு ஆளான எந்தப் பெண்ணும் அமைதியாக இருக்க வேண்டும் என்றோ புகார் செய்வதையோ, குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவதையோ தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை என இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.