டெல்லி:இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சலசலப்புக்கு மத்தியில், கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனிச்சையாக செயல்படக் கூடிய விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளது.
நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்விஎன் பாட்டியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன்.20) விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீட் தேர்வு முறைகேட்டை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தனிக்குழு விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடு குறித்து விசாரணை நடத்தும் குழு எவ்வித தலையீடுகளும் இன்றி தனிச்சையாக செயல்படக் கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் என்றனர்.
மேலும், தேசிய தேர்வு முகமை எப்படி 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு என்பதை முடிவு செய்தது, என்ன அளவுகோலை பின்பற்றி இந்த முடிவை எடுத்தது என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும், மறுதேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினர். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், நீட் கவுன்சிலிங்குக்கு தடை விதிக்க முடியாது என்றனர்.