புதுடெல்லி: சிறந்த இலக்கிய படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதை வழங்கி வருகிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இவற்றில், தமிழ் மொழிக்கான அகாடமி விருது, தமிழ் துறை பேராசிரியரான ஏ.ஆர்.வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்ற ஆ்ய்வு நூலுக்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெறும் வெங்கடாசலபதிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "திருநெல்வேலி மண்ணின் எழுச்சியையும், சமரசமற்ற சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் வரலாற்றையும் எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் நாற்பது ஆண்டுகாலம் ஆய்வு செய்து எழுதியுள்ள “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூலுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.
தமிழ்ப் பதிப்புலகில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றி, வரலாற்று ஆய்வுகளை எளியோரும் எளிமையாக புரிந்துகொள்ளும் நடையில் அனைவரிடமும் கொண்டு சேர்த்த சிறந்த எழுத்தாளர், ஆய்வாளர் மற்றும் பதிப்பாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தியுள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழ் துறையில் வேங்கடாசலபதி பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெங்கடாசலபதியை போன்று, ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, அசாமி, ஒடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த மொத்தம் 21 படைப்பாளிகள் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.