கொல்கத்தா: நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கொல்கத்தா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை வெளியான இந்த தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ , விசாரணை நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி குற்றபத்திரிகை தாக்கல் செய்தது.
சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில், கைது செய்யப்பட்ட போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய் ஒருவர் மட்டும்தான் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரே நபர் என்றும் அவருக்கு எதிராக டிஎன்ஏ, ரத்த மாதிரிகள் உள்ளிட்ட 11 ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறப்பட்டிருந்தது.
கொல்கத்தாவில் உள்ள சீல்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனிர்பன் தாஸ், "குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி,"என்று கூறினார். இவர் மீதான தண்டனை விவரங்கள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 64,66 மற்றும் 103(1) என் கீழ் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி கூறியுள்ளார்.