டெல்லி:18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதேநேரம் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி 3வது பெரிய கட்சியாகவும் உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த எம்பிக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.