தவுசா:ராஜஸ்தான் மாநிலம், தவுசாவில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம் பந்திகுயி பகுதியில் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்த நிலையில் இருந்த 35 அடி ஆழ, ஆழ்துளை கிணற்றில் 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தவுசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதா சர்மா, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினர்.
மீட்புப் பணி நடைபெற்ற இடம் (Credit - ANI) இதேபோல, மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் (எஸ்டிஆர்எஃப்) சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர். சுமார் 18 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்று குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க:சுசேதா கிருபளானி முதல் அதிஷி வரை.. முதல்வர் பதவியை அலங்கரித்த பெண்கள் பட்டியல்!
மீட்பு பணி குறித்து என்டிஆர்எஃப் உதவி கமாண்டர் யோகேஷ் குமார் கூறுகையில், "குழந்தை 28 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டிருந்தார். குழந்தையை மீட்க ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டது. குழந்தையின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. மழை காரணமாக மீட்புப் பணிகள் எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் நீடித்தது. என்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 30 பேரும், எஸ்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 10 பேரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்" என்றார்.
மீட்புப் பணி நடைபெற்ற இடம் (Credit - ANI) குழந்தை மீட்கப்பட்டது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் சர்மா கூறுகையில், "18 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் கடினமான பணியாக இருந்தது. என்டிஆர்எஃப், மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்களின் உதவியால் எங்களால் இதை செய்ய முடிந்தது. குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.