டெல்லி: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். நேற்று (ஜூன் 9) அமைச்சரவை பதவியேறுப்புக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் அதற்காகப் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 30 மத்திய அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், மற்றும் 5 மாநில அமைச்சர்கள் (சுயேச்சை) பதவியேற்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போது அவர் 'பிரதமர் கிசான் திட்டத்தின்' 17வது நிதி தொகையை விடுவித்து முதல் கையெழுத்திட்டார்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவில் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்பில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி கூறுகையில், ''வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்புகிறோம்'' என்றார்.