டெல்லி:நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் 293 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.
அதேநேரம், 234 இடங்களில் இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இந்த நிலையில், நேற்று முதல் கூடிய 18வது மக்களவையின் முதல் கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் பர்த்ஹருளி மஹ்தாப் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, இன்றும் திமுக மக்களவை உறுப்பினர்கள் உள்பட பலருக்கும் மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பர்த்ஹருளி மஹ்தாப்-க்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான முடிவு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.