டெல்லி:மத்திய பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், இன்று மக்களவையில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினரை கத்தியால் குத்தியுள்ளது எனவும், வினாத்தாள் கசிவு என்ற மிகப்பெரிய விவகாரம் இளைஞர்களை பெரிதும் பாதித்துள்ளது என குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
பட்ஜெட்டுக்கு முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அல்வா கிண்டிய புகைப்படத்தை ராகுல் காந்தி அவையில் காண்பித்தார். மேலும், அவையில் பேசிய அவர், “மத்திய அரசின் சக்கர வியூகத்தில் அனைவரும் சிக்கியுள்ளனர். இதில் பாஜக எம்பிக்கள், விவசாயிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் அடங்குவர்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஹரியானாவின் குருஷேத்திரத்தில் 6 பேர் சேர்ந்து அபிமன்யு என்ற இளைஞரைக் கொன்றனர். இந்த சக்கர வியூகம் வன்முறை மற்றும் பயத்தைக் கொண்டது. அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். சக்கர வியூகம் பத்மவியூகம் என்றும் அழைக்கப்படுகிறது.
பல சுற்றுக்களால் ஆன தாமரை மலரைப் போன்றது. நீங்கள் (மத்திய பாஜக அரசு) சக்கர வியூகத்தை உருவாக்கினார் நாங்கள் அதனை உடைப்போம். ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் எதிர்கட்சிகள் இந்த வியூகத்தை முறியடிக்கும். இந்த 21ஆம் நூற்றாண்டில் மற்றுமொரு சக்கர வியூகம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த தாமரை போன்ற வடிவமைப்பை பிரதமர் தனது சட்டையின் நெஞ்சிலும் பதித்துள்ளார். அபிமன்யுவைப் போல இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இந்த சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளன. இந்த சக்கர வியூகம் மூன்று பணிகளைச் செய்கின்றன. அதன்படி, மூலதனத்தின் சிந்தனை மற்றும் நிதி ஆற்றல், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் ஐடி துறைகள் மற்றும் அரசியல் நிர்வாகம் ஆகும்.
இந்த மூன்றும் சக்கர வியூகத்தின் இதயமாக இருந்து நாட்டில் வேலை செய்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் ஆகியவற்றிற்கு உதவிகரமாக இருக்கும் என பட்ஜெட்டை நாங்கள் நினைத்தோம். ஆனால், சக்கர வியூகத்தில் பட்ஜெட் சிக்கி அதன் திறனை இழந்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீது சக்கர வியூகம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
இதனை பணமதிப்பிழப்பு மற்றும் வரி பயங்கரவாதம் மூலம் நடத்தியுள்ளது. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவதில் இந்தியா கூட்டணி முனைப்புடன் செயல்படும். பிரதமரின் பேச்சைக் கேட்ட நடுத்தர மக்கள், கரோனா காலத்தில் கைகளை தட்டினர் மற்றும் மொபைல் போன்களில் டார்ச் அடித்தனர். ஆனால், தற்போது அவர்கள் இந்தியா கூட்டணி பக்கம் திரும்பியுள்ளனர், காரணம், இந்த அரசு மீது அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதையும் படிங்க:அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வாக்குமூலம்!