ஐதராபாத்:பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பல்வேறு காலிஸ்தானிய அமைப்புகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், பிரபல ரவுடி குழுவான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர், மூஸ்வாலா கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இது தொடர்பாக சத்விந்தர் சிங் என்கிற கோல்டி பிராரை போலீசார் தேடி வந்தனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கனடாவிற்கு தப்பிச் சென்ற கோல்டி பிரார் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இன்டர்போல் போலீஸார் கோல்டி பிரார்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினார். இதனால் கோல்டி அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார். அமெரிக்காவின் பிரஸ்னோ நகரில் அவர் வசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நகரில் இரு குழுக்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோல்டி பிரார் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.